Wednesday, February 27, 2013

காலியாவின் அத்துமீறலும், ஆசை வார்த்தையும்..

என் சுயநினைவு திரும்பியபோது, என்மீது கனமான பாறையைத் தூக்கி வைத்ததுபோன்ற உணர்வு.மூச்சுவிட மிகுந்த சிரமமாக இருந்தது. முதுகு மற்றும் பின்புறங்களில் முட்கள் பாய்ந்து உடல் விஷமேறியதுபோன்று கடுத்தது.இருட்டில் சட்டென ஒன்றும் பார்வைக்குப் புலனாகவில்லை.



இதுதான் நரகமோ? நான் இறந்துவிட்டேன் போலிருக்கிறது. பரவாயில்லை. அதிகம் சிரமப்படாமல், என் அம்மாவைப்போல தூக்கத்திலேயே என் உயிர் பிரிந்துவிட்டது என்றெல்லாம் சிந்தித்தேன். ஆனால் உண்மை அதுவல்ல. என் பாழும் ஜென்மம் உச்ச அவமானங்களையும், அவஸ்தைகளையும் படவேண்டும் என்று ஆண்டவன் என் தலையில் கடப்பாரை கொண்டல்லவா எழுதியிருக்கிறான்?



காலியாவின் சுருட்டு நாற்றம் மிக்க மூச்சுக்காற்று என்மீது படர்ந்தது. மெல்ல கண்களை விரித்துப்பார்க்க, அந்த படுபாவி என்மீது சயனித்திருந்தான். அவன் கைகள் இரண்டும் என் மார்பகங்களைப் பிசைந்தன. அவனின் கோரமான முகம் என் முகத்தோடு ஒட்டி உறவாடிற்று. நான் எதிர்ப்பு தெரிவிக்கும் மனநிலையில் இல்லை. என் கேவலமான நிலைகுறித்து, வெம்பித் துடித்தேன். என்னையும் மீறி விம்மல் வெடிக்க, நான் விழித்திருப்பதை காலியா உணர்ந்தான்.



"என் ஆண்குறியை வெட்டிவீசியமைக்காக, முதன்முதலாக இன்றுதான் வேதனைப்படுகிறேன். உன் உடல் எவ்வளவு அழகு? இப்படி ஒரு பெண்மை உலகில் இருக்கும்போது நானும் பெண்ணாக மாற ஆசை கொண்டேனே! எவ்வளவு முட்டாள்தனம். பூப்போன்ற உடல்கொண்ட நீயல்லவா பெண்மைக்கு இலக்கணம்? சே! நான் பெண்ணுமில்லாமல், ஆணுமில்லாமல் போனேனே! " என்று காலியா புலம்பினான்.



காலியா.. என்னை விட்டு விலகு.. எனக்கு என்னவோபோல இருக்கிறது. ப்ளீஸ்!!



காலியா என்னை விட்டு எழுந்து நின்றான். சற்றுநேரம் என்னை வைத்தகண் மாறாமல் பார்த்த அவன் சொன்னான்...



இப்போது சொல்.. நாம் இருவரும் தப்பிவிடுவோம். உன்னை நான் காப்பாற்றுகிறேன். உன் மிகுதி வாழ்க்கை என்னோடு கழிக்க ஒப்புக்கொள்! இதே காட்டில் வேறொரு மூலையில் சுங்கின் கண்ணுக்கு அகப்படாமல் நாம் நிம்மதியாக வாழலாம். என்ன சொல்கிறாய்?



என்னைக் கொன்றுவிடு காலியா! நான் வாழ விரும்பவில்லை! நான் மனதளவில் நொறுங்கிப்போய்க் கிடக்கிறேன். தயவுசெய்து என் வாழ்வை முடித்துவிடு!



முட்டாள்தனமாக பேசாதே! நீ சாகப் பிறந்தவள் அல்ல! ராணிபோல வாழப் பிறந்தவள். காலம் முழுதும் இந்தக் காலியா உன் காலடியில் கிடப்பான். உன்னைப்போன்ற பேரழகிக்கு இப்படி ஒரு துர்மரணம் வேண்டாம். உம் என்று ஒரு வார்த்தை சொல்! இருளில் நழுவிவிடுவோம். எவனும் கண்டுபிடிக்க முடியாது! சீக்கிரம் யோசி!! காலியா பரபரத்தான்.



என்னை ஏன் இப்படி பகடைபோல எல்லோரும் உருட்டி விளையாடுகிறீர்கள்? நான் ஒப்புக்கொள்வது என்று இருந்தால் எனக்கு ஏன் இந்த நிலைமை? அடுத்தவர் அறியாமல் முகாமிலேயே, காரியத்தை முடித்துக்கொள் என்று சுங்கிடம் அப்போதே சொல்லியிருப்பேனே! நான் அப்படிப்பட்டவள் அல்ல. தயவுசெய்து என்னை கேவலப்படுத்தாதே!



காலியாவிடம் நான் தாழ்ந்த குரலில் சொல்லிக்கொண்டிருக்கும்போது, பரண் வீட்டில் விளக்கொளி தெரிந்தது.



என்ன நடக்கிறது அங்கே? சுங் கத்தினான்.



ஒன்றுமில்லை காம்ரேட்! இவள் உடல்மீது ஒரு பாம்பு ஊர்ந்தது. அதை அடித்து அப்புறப்படுத்துகிறேன்!



ம்ம்ம் நல்லவேலை செய்தாய்! அவள் அவ்வளவு சீக்கிரம் சாகக்கூடாது! அடேய் பாலி, சேகி.. தூங்கியது போதும் .. எழுந்திருங்கள்! உமாவுக்கு காவலாக நில்லுங்கள். கணப்பு மூட்டி வெளிச்சம் உண்டாக்கிக்கொண்டு, விழிப்பாக இருங்கள். காலியா.. நீ போய் தூங்கு! காலையில் வேலை அதிகம் இருக்கிறது..!



சுங் மடமடவென உத்தரவுகளை பிறப்பித்தான். காலியா என்னைப் பார்த்தவாறே அகன்றான். நான் அவனைக் காட்டிக்கொடுக்க விரும்பவில்லை. சுங் உடன் மெய்க்காவலர்களாக வந்த இரு போராளிகளும் காவல் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். சுங் மீண்டும் பரண் வீட்டினுள் மறைந்தான்.



பொழுது விடிந்தது.

No comments: